Thursday, October 30, 2008

நீ வருவாயா...?

'தாயாய்' உன்னைக் கண்டிருக்கிறேன்!
நீ உணவு ஊட்டியபோதும்
உன் மடியில் தலைவைத்து உறங்கியபோதும்
நீ எனக்கு அன்னையே!

'சிநேகிதியாய்' நான் உணர்ந்திருக்கிறேன்!
கதைகள் பல பேசியபோதும்
பிடித்தவற்றை பகிர்ந்துக் கொண்டபோதும்
நீ என் தோழியே!

'சகோதரியாய்' உன்னை நினைத்திருக்கிறேன்!
எனக்காக நீ பரிந்து பேசியபோதும்

உன்னுடையதை என்னுடையதாக்கியபோதும்
நீ என் உடன்பிறந்தவளே!

'விரோதியாய்' உன்னை திட்டியிருக்கிறேன்!
எனக்கு பிடித்த பாடலை
நீ வேண்டுமென்றே மாற்றும்போதும்
நீ நேசித்தவற்றை
நான் குறை கூறியபோதும்
நீ என் பிரியமான எதிரியே!

'வேலைக்காரி'யாகவும்
உன்னை ஆட்டுவித்திருக்கிறேன்!
இப்படி எல்லா முகங்களிலும்
நீ என்னுடதான் வாழ்ந்திருக்கிறாய்!
இன்று எங்கே உன் திருமுகம்?

கதைகளிலும் திரைபடங்களிலும்
வரும் ஆவியைப் போலாவது
வந்து விட்டு செல்...
உன் வாசனையையாவது
உணர்ந்து கொள்கிறேன்!

Tuesday, October 21, 2008

ஒரு வேண்டுகோள்...

காலனே!
என் ஆயுளில்
ஒரு நாளை நீட்டித்து விடு!
என்னவள்
எனைவிட்டு பிரிந்த
அந்த கொடிய நாளில்
நானும் இறந்து போயிருக்கிறேன்!
அவளுடன் வாழத்தான் வழியில்லை...
அவளின் நினைவுகளோடு
ஒரு நாள் அதிகமாக
வாழ்ந்துவிட்டாவது போகிறேனே?


Monday, October 20, 2008

அவளிடம் கேட்க வேண்டும்...

நீ சொல்லிக் கொடுத்த 'அன்பு'
சில நேரங்களில் உயிரோடு வாழ்கிறது!
கொடுத்து விட்டு ஏமாரும்போது
பல நேரங்களில் தோற்றுப்போய் கல்லறையில்...
உயிர்த்தெழ முடியாமல்!

நீ அறிமுகப்படுத்திய 'நட்பு'
சில நேரங்களில் உயரத்தில் பறக்கிறது!
நம்பிக்கை துரோகத்தை மனம் உணரும்போது
பல நேரங்களில் பள்ளத்தில்...
மீண்டும் யெழவே நினைக்காமல்!

நீ உணர்த்திய 'மனிதநேயம்'
சில நேரங்களில் கர்ணனனாய் காட்டுகிறது!
கையில் காசு இல்லாதபோது
பல நேரங்களில் பொய்முகத்தில்...
நிஜத்தை சொல்லவே தோன்றாமல்!

நீ கற்பித்த 'உண்மை'
சில நேரங்களில் சத்தியவானனாய் போராடினாலும்!
பிறரின் முன்னே ஒரு பேச்சும் பின்னே ஒரு பேச்சும்
காதில் இடி முழக்கமாய் வரும்போது
பல நேரங்களில் நான் மிருகமாய்...
மனதினுள் எழும்
ருத்ரதாண்டவத்தை வெளிக்கொணராமல்!

இன்று நீயுமில்லை...
உன் வழிமுறையும்
என்னுள் இல்லை...
சொல்லடிப் பெண்ணே
இப்பொழுது நான் மாறிப்போனேனா?
உலகம் மாறிப் போனதா?


அவள் பூமிக்கு வந்த காரணம்...?

தமிழுக்கு அமுதென்று பெயர்!
அவளுக்கும் அமுதென்று பெயர்!
முருகனுக்கு அழகென்று பெயர்!
அவளுக்கும் அழகென்று பெயர்!
தேவலோகக் கன்னிகளுக்கு தேவதையென்று பெயர்!
அவளுக்கும் தேவதையென்று பெயர்!
தேவதைகள்
பூமிக்கு நிரந்தரமாக
வருவதில்லை...
என்பதை பறைசாற்றத்தான்
அவள் பூமிக்கு வந்தாளோ...?
அவள் விரைவாக
இவ் மண்ணுலகை விட்டுப் பிரிந்ததும்

அதனால்தானோ...?

என் கனவு அவள்...

மனிதனை
ஒரு நாளும்
நான் கடவுளாக
நினைத்தது இல்லைதான்!
ஆனால், அவள் மட்டும்
இதற்கு விதிவிலக்கு!
அவள் கடவுள் மட்டுமல்ல...
என் கனவும்!

உனக்காக காத்திருகிறேன்...

உன் நினைவுகள் தருகிற சுகம் கொஞ்சம்...
உன் பிரிவுகள் தருகிற வேதனைகள் அதிகம்...
நீ இல்லாத ஒரு உலகில்
நான் இன்னும் வாழ்கிறேன் தெரியுமா?
நீ என்னை விட்டு பிரிந்து போனாலும்...
உன் அன்பின் பரிணாமம் என்னுளும் இருக்கிறது!
உன் அழுகையின் சாயலைக்கூட என்னுள் காண்கிறேன்!
என் நடை, பேச்சு, சிரிப்பு எல்லாவற்றிலும்
நீ தந்த பாதிப்புகள் நிறையவே!
என்னுடன் நீ வாழ்ந்ததிற்கான ஆதாரங்களை
உன்னுள் நான் காணவும்...
உன்னுடன் நான் வாழ்ந்ததிற்கான ஆதாரங்களை
என்னுள் நீ உணரவும்...
நீ வேண்டும்!
விரைந்து வா...
என் உயிரே வா... வா...
உனக்காக காத்திருகிறேன்...